தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் 72 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா

முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் 72 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நான்கு வழிச்சாலைகளில், சொந்த வாகனங்களில் பயணப்படுவோர் நிழலுக்கு ஒதுங்குவதற்குக்கூட ஒரு மரம் கூட இல்லாத சூழலே இருக்கிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் ஏற்கெனவே இருந்த மரங்களைக்கூட நான்கு வழிச்சாலைத் திட்டத்திற்காக வெட்டியவர்கள் திரும்ப நடாமலேயே விட்டுவிட்டார்கள்.

இந்தச் சூழலில், மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பிரமாண்டமான சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றை உருவாக்கியிருக்கிறது ராம்கோ நிறுவனம். சிமெண்ட் உற்பத்திக்காக பந்தல்குடியில் அந்நிறுவனம் நடத்திவந்த சுண்ணாம்புக் கல் சுரங்கம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்தை சீரமைத்து பூங்காவாகப் பயன்படுத்த அந்நிறுவனம் முடிவெடுத்தது. அதன்படி 72 ஏக்கர் நிலப்பரப்பளவில் 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்கா உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்காவை நேற்று மாலை 6 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்த சுற்றுச்சூழல் பூங்கா, நீர்நிலைப்பாதை, வறண்ட நிலத்தாவரங்கள், கற்றாழை அடினியம் தோட்டம், பந்தல்பூங்கா, புல்வெளி மற்றும் கல்பூங்கா போன்ற பல பகுதிகளை உள்ளடக்கியது. பூங்காவில் சுரங்கத்தில் கிடைத்த தேவையற்ற கற்கள் மற்றும் உள்ளூர் செடிகளால் உருவாக்கப்பட்டுள்ள கல்பூங்கா, நடைபாதை போன்றவையும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 40 ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் (மியாவாக்கி) பகுதியில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5 லட்சம் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய மண்ணின் மரங்களான வேம்பு, புங்கம், அரசு, அத்தி, ஆலமரம், வாகை, நாவல், வில்வம், விலா, இலந்தை, மஞ்சநெத்தி, நொச்சி, ஆவாரை போன்றவையும், வறட்சி மற்றும் நீரில் வாழும் நாட்டு மரங்களான கருவேலம், வெல்வேலம், குடைவேல் போன்றவையும் நடப்பட்டிருக்கின்றன. சுரங்கம் அமைவதற்கு முன்பு இந்த இடத்தில் என்னென்ன எறும்பு, கரையான், வண்டுகள், சிறு பறவைகள், விலங்குகள் இருந்தனவோ அவற்றை எல்லாம் திரும்பக் கொண்டுவருவதே இந்தப் பூங்காவின் நோக்கம் என்று அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா, பி.வி.நிர்மலா வெங்கட்ராமராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in