குடிபோதையில் வாலிபரின் காதைக் கடித்து துப்பிய சம்பவம்!

கும்பலைப் பிடிக்க போலீஸ் வலைவீச்சு
குடிபோதையில் வாலிபரின் 
காதைக் கடித்து துப்பிய சம்பவம்!

சென்னையில் டாஸ்மாக் கடை அருகே மது அருந்தியபோது, மதுபாட்டிலை கீழே தள்ளிவிட்டதை தட்டிக்கேட்ட வாலிபரின் காதை கடித்துத் துப்பிய கும்பலை போலீஸார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சென்னை, மேற்கு மாம்பலம் ஜானகியம்மாள் தெருவைச் சேர்ந்தவர் பிரமோத் (24). இவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார். சென்னை பல்கலை தொலைநிலையில், பி.ஏ. பட்டப் படிப்பும் படித்து வருகின்றார்.

நேற்று இரவு பிரமோத், மேற்கு மாம்பலம் பக்தவச்சலம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி, அருகே உள்ள இடத்தில் நின்று அருந்தியுள்ளார். அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 பேர், பிரமோத்தின் மதுபாட்டிலை தள்ளிவிட்டதில் மதுபாட்டில் கீழே விழுந்து உடைந்தது. இதில் ஆத்திரமடைந்த பிரமோத், அந்த நபர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்த பிரமோத்தை, அந்தக் கும்பல் அடித்து உதைத்து அவரது காதைக் கடித்து துப்பியது. இதில் அவரது காது அறுந்து தொங்கியது. பின்னர், அந்த கும்பல் பிரமோத்திடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த பிரமோத், கேகே நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அசோக் நகர் போலீஸார், பிரமோத்தின் காதைக் கடித்து செல்போனைப் பறித்துச் சென்ற கும்பலைத் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.