
காரைக்கால் அருகே மீனவக் கிராமத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 குழந்தைகள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் அருகேயுள்ள காரைக்கால்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் மற்றும் விஜயன், திருமுருகன், மாணிக்கவேல் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோருக்கு, நேற்று நள்ளிரவு திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் வாந்தி மயக்கத்திற்கு காரணம் எதுவும் தெரியவில்லை. வழக்கம்போல் உணவும் தண்ணீரும் மட்டுமே வைத்ததாகக் கூறினர்.
இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த நலவழித்துறை அதிகாரிகள் இன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரை நேற்று நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவராஜ்குமார் மற்றும் மருத்துவக் குழுவினர் காரைக்கால்மேடு மீனவக் கிராமத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் கழிவு நீர் கலந்துள்ளதும், அந்த குடிநீரை மக்கள் குடித்தது தான் மக்களின் வாந்தி மயக்கத்துக்கு காரணம் என கண்டறிந்தனர். இது குறித்து மருத்துவர் ஆர்.சிவராஜ்குமார் கூறுகையில், "காரைக்கால்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட சுனாமி குடியிருப்புப் பகுதியில் 3 தெருக்களில் வசிக்கும் சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
அவர்களில் சிலர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்தப் பின்னர் நலமுடன் உள்ளனர். சிலர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதனால் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது என ஆய்வு செய்யப்பட்டதில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் கழிவு நீர் கலந்துள்ளது கண்டறியப்பட்டது.
உடனடியாக மருத்துவக்குழுவினர் மூலம் அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுப்பணித்துறை மூலம் குடிநீர்க் குழாய் உடைப்பை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிமேல் யாருக்கும் பாதிப்பு தொடராத வகையில் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 11 பேரும் நலமுடன் உள்ளனர்" என்று தெரிவித்தார்.