திருச்சி பொன்மலையில் தயாரான பழமையான நீராவி எஞ்சின்!

ஊட்டி மலை ரயிலில் இணைத்து சோதனை ஓட்டம்
புதிய எஞ்சின் சோதனை ஓட்டம்
புதிய எஞ்சின் சோதனை ஓட்டம்

முதல்முறையாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மலை ரயிலுக்கான புதிய நீராவி எஞ்ஜினை கொண்டு சோதனை ஓட்டம் நடத்தியுள்ளது ரயில்வே நிர்வாகம். இதன் தொடர்ச்சியாக, மலை ரயிலின் பழமை மாறாமல் மீண்டும் நீராவி எஞ்ஜினைக் கொண்டு இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலின் நீராவி எஞ்ஜின்கள், சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் மட்டுமே தற்போது வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நிலக்கரி எரிக்கப்பட்டு நீராவி மூலம் இயங்கும் இந்த எஞ்ஜின்கள் இறக்குமதி செய்யப்படும்போது, இவற்றின் விலை அதிகம் என்பதாலும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாகவும் மலை ரயிலின் எஞ்ஜின்கள் படிப்படியாக ஃபர்னஸ் ஆயிலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டன.

அதே நேரத்தில், நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்ன அந்தஸ்து கிடைத்த நிலையில், இந்த ரயிலில் அதிகமான அளவில் வெளிநாட்டுப் பயணிகள் விரும்பி பயணிக்க தொடங்கினர். இதனால், இதன் பாரம்பரியம் மாறாமல் மீண்டும் நீராவி எஞ்ஜினை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டதோடு அதை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முடிவெடுத்தது.

இதையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் முதல்முறையாக ரூ.9 கோடி செலவில், நிலக்கரியில் இயங்கும் புதிய நீராவி எஞ்ஜின் தயாரிக்கப்பட்டது. மொத்தம் 50 டன் எடையுடன், 10.8 மீட்டர் நீளத்தில் இந்த எஞ்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 டன் நிலக்கரி வைக்கவும் 4,500 லிட்டர் தண்ணீர் நிரப்பவும் வசதி உள்ளது.

புதிதாக தயாரிக்கப்பட்ட இந்த நீராவி எஞ்ஜின் நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நேற்று அதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நிலக்கரி எரிக்கப்பட்டு இயக்கப்பட்ட இந்த புதிய எஞ்ஜினில் பெட்டிகள் இணைக்கப்பட்டு சமவெளி பகுதியில் நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக இருக்கவே, அது மலைப்பாங்கான வழித்தட பாதையில் இயக்கி சோதிக்கப்பட்டது. இதனிடையே 4 மாதங்களுக்குப் பிறகு, 6-ம் தேதி முதல் மீண்டும் ஊட்டி மலை ரயில் இயக்கப்பட்டதை பயணிகள் உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டாடினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ரயில்வே அதிகாரிகள், “நவீன காலத்திற்கேற்ப டீசல், மின்சாரம் போன்றவை மூலம் இயங்குவதை மலை ரயில் காதலர்கள் விரும்புவதில்லை. தவிர வெளிநாட்டுப் பயணிகள் நீராவி எஞ்சினை எதிர்பார்த்தே வருகின்றனர். இதையெல்லாம் கவனத்தில் கொண்டே நாங்களே நீராவி எஞ்சினை நம் நாட்டிலேயே வடிவமைத்துள்ளோம். சோதனை ஓட்டங்கள் முடிந்தபிறகு, பயணிகள் ரயிலை இழுக்கும் பணியில் இந்த புதிய எஞ்சின் அனுமதிக்கப்படும்’’ என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in