
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற இருந்த ஏலத்தில் திமுக மற்றும் விசிக கட்சிகளை சேர்ந்த சிலர் தாக்குதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகே உள்ள வரதமாநதி அணையின் தடுப்பு அணையாக உள்ள சக்கிலியன் அணைக்கட்டிற்கான ஷட்டர் பழுதடைந்துள்ளது. இதனை, சீரமைப்பது மற்றும் இதர பணிகளுக்கான ஏலம் இன்று பழனி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலத்தில் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக சேலம், ஒட்டன்சத்திரம், ஈரோடு என தமிழகம் முழுவதும் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் வந்திருந்தனர். இன்று மாலை 3 மணியுடன் டெண்டர் பெட்டியில் ஒப்பந்தங்கள் போடுவது கடைசி நேரம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பழனி பகுதியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் கருப்புசாமி தலைமையிலான திமுக உள்ளிட்ட கட்சியினர், வெளியூரில் இருந்து வந்திருந்த ஒப்பந்ததாரர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். காவல்துறையினர் முன்னிலையிலேயே அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற ஒப்பந்ததாரர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், சிலர் உருட்டுக் கட்டைகளுடன் அவர்களை மிரட்டினர். வெளியூர்களிலிருந்து வந்திருந்த ஒப்பந்ததாரர்கள் கார்களின் கண்ணாடிகளை உடைத்ததால் பெரும் பதற்றம் நிலவியது. காவல் துறையினர் முன்னிலையிலேயே திமுக மற்றும் விசிக கட்சிகளை சேர்ந்த சிலர் தாக்குதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.