`15 பயனாளிகளும் தலா 3 ஆயிரம் தரணும்'- வீடியோ வெளியானதால் வேலையை இழந்த அரசு அதிகாரி

`15 பயனாளிகளும் தலா 3 ஆயிரம் தரணும்'- வீடியோ வெளியானதால் வேலையை இழந்த அரசு அதிகாரி
வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் பெறும் காட்சி

பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகளிடம் லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளிடம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்டவர்கள் லஞ்சம் பெறுவது தமிழகத்தில் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது. அப்படி லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிபடுவதும் அடிக்கடி நடக்கிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர். துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல். இவர் பச்சமலை பகுதியில் உள்ள வண்ணாடு ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக தேர்வாகிய 15 பயனாளிகளிடம், தலா 3 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். மேலும், இடத்தை ஆய்வு செய்யும்போது மீதமுள்ள பணத்தை தர வேண்டும் எனவும் அவர்களிடம் தெரிவித்தார்.

இந்த காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் அலைபேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விசாரணை மேற்கொண்டார். அதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவேல் லஞ்சம் பெற்றது உறுதியானதையடுத்து, அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in