வயலில் இறங்கி அறுவடை செய்த தருமபுரி கலெக்டர்: விவசாயிகள் ஆச்சரியம்

வயலில் இறங்கி அறுவடை செய்த தருமபுரி கலெக்டர்: விவசாயிகள் ஆச்சரியம்

ஆய்வுக்கு சென்ற தருமபுரி மாவட்ட கலெக்டர் திடீரென வயலில் இறங்கி நெற்கதிர்களை அறுவடை செய்தார். இதைப் பார்த்து விவசாயிகள் ஆச்சரியமடைந்தனர்.

2010-ம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சிப்பணித்தேர்வில் அனைத்திந்திய அளவில் முதலிடம் பெற்றவர் திவ்யதர்ஷினி. இளங்கலை சட்டப்படிப்பு மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ள இவர், 2012-13-ம் ஆண்டில் கோயம்பத்தூர் உதவி ஆட்சியராகவும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை கோட்டத்தில் சார் ஆட்சியராக 2013-15 வரை பணிபுரிந்துள்ளார்.

2016-ம் ஆண்டில் தமிழக அரசு உள்துறை துணை செயலராகவும், 2017-ம் ஆண்டில் தமிழக அரசின் பொதுத்துறையின் செயலராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் சென்னை பெருநகர நிர்வாகத்தில் வட்டார துணை ஆணையராக (வடக்கு) பணிபுரிந்துள்ளார். இராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் ஆட்சித்தலைவராக பணிபுரிந்துள்ளார். சென்னை பெருநகர நிர்வாகத்தில் வட்டார இணை ஆணையராக (சுகாதாரம்) பணிபுரிந்துள்ளார். திருச்சி மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணிபுரிந்துள்ளார்.

தற்போது தருமபுரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றுள்ளார் திவ்யதர்ஷினி. இந்நிலையில், மணியம்பாடி கிராமத்துக்கு ஆட்சியர் இன்று அதிகாரிகளுடன் ஆய்வுக்கு சென்றார். அப்போது, திடீரென வயலில் விளைந்திருந்த நெற்கதிர்களை அறுவடை செய்தார் ஆட்சியர். பெண் அதிகாரிகளும் அறுவடையில் ஈடுபட்டனர். பின்னர், அறுவடை செய்த நெற்கதிர்களை விவசாயிகள் தரையில் அடித்தனர். உதிர்ந்த நெல்லை சாக்குமூட்டையில் அடைத்தனர்.

ஆட்சியர் திடீரென வயலில் இறங்கி நெற்கதிர்களை அறுத்தது அங்கிருந்த விவசாயிகளை ஆச்சரியப்பட வைத்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in