துணை ஆட்சியர் ராஜாமணி உயிரிழந்தது எப்படி?

துணை ஆட்சியர் ராஜாமணி உயிரிழந்தது எப்படி?
ராஜாமணி சடலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் பெண் துணை ஆட்சியர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் அந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துணை ஆட்சியர் ராஜாமணி
துணை ஆட்சியர் ராஜாமணி

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை ஆட்சியராக இருப்பவர் ராஜாமணி. இவர் நேற்று இரவு சங்கராபுரம் அருகே ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கள்ளக்குறிச்சி சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் தாறுமாறாக ஓடியது.

அப்படி ஓடும்போது சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் பயங்கரமாக மோதியது. அதற்குப் பிறகும் தாறுமாறாக ஓடிச்சென்ற அந்த கார் அங்கிருந்த மின்கம்பத்தின் மீது பலத்த சப்தத்தோடு மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து கார் மீது விழுந்ததால் துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

அதனால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் காரில் சென்ற ஓட்டுனர் உட்பட மூன்று பேருக்கும், அந்த மின் கம்பத்தின் அருகே நின்றிருந்த ஒரு சிறுமி உட்பட இரண்டு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு விபத்தில் பலத்த காயமடைந்து ஐந்து பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 11 வயது கோபிகா என்ற சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

விபத்தில் உயிரிழந்த துணை ஆட்சியரின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சங்கராபுரம் அருகே சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி துணை ஆட்சியர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிகாரிகள் மத்தியிலும் பொதுமக்கள் தரப்பிலும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.