`வடமாநிலத்தவர்களை பணியில் அமர்த்தாதே'- ஓரணியில் திரண்ட கட்சிகள்

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் வடநாட்டவர்களை பணியமர்த்தக் கூடாது என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் தொடர்ந்து வடநாட்டவர்களை பணியமர்த்தும் போக்கு நீடித்து வருகிறது. இதனை தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்டவை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் 15 க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்து இருப்பதாகவும், பணியில் சேர்வதற்காக புகைவண்டி மூலம் மயிலாடுதுறை வந்த அவர்களை மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலையத்தில் பணிபுரியும் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் வரவேற்று, தங்கவைத்து பணியில் சேர உதவ இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

வடநாட்டவர்களை பணியில் அமர்த்தும் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தை கண்டித்தும், தமிழகத்தில் வட நாட்டவர்களை பணியமர்த்த கூடாது என்பதை வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட தலைவர் பேராசிரியர் இரா.முரளிதரன் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன், இயற்கை விவசாயி மாப்படுகை அ.ராமலிங்கம், தமிழ் தேசிய பேரியக்கம் அரவிந்த், பாமக முன்னாள் நகர செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழுத் தலைவர் தமிழன் கணேசன் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வடமாநிலத்தவர்களை பணி அமர்த்தியதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதுகுறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அஞ்சலக அதிகாரிகளிடம் வழங்குவதற்காக அஞ்சலகத்தில் உள்ளே சென்றனர். அவர்கள் அஞ்சலகத்தில் உள்ளே நுழைந்து மனு அளிக்க அங்கிருந்த வடமாநில அஞ்சலக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், அஞ்சல் நிலைய அலுவலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை தலைமை அஞ்சல் அதிகாரியிடம் மனுவை வழங்க செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in