
``பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்ந்து கொண்டு போகும் நிலையில் சொத்து வரியையும் உயர்த்தினால் என்ன செய்வது? மக்களின் நன்மை கருதி எல்லாவற்றையும் குறையுங்கள்'' என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கரோனா தொற்று நோய் பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் வேலையின்மை பிரச்சினைகள் ஆகியவற்றிலிருந்து ஏழை, எளிய நடுத்தர மக்கள் இன்னும் மீளாத நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை மிகக் கடுமையாக உயர்த்தி இருப்பது ஏழை எளிய மக்களின் வாழ்வை நசுக்கும் செயலாகும்.
இதனால் உணவுப்பொருள் விலையேற்றமும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் மக்களை தாங்கமுடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த துயரத்திற்கும், ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளனர். எனவே மத்திய அரசு பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல, மாநகராட்சி, நகராட்சிபகுதிகளில் சொத்து வரி உயர்வு மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிப்பு அடைவார்கள். எனவே தமிழக அரசு உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.