வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் 479 அதிகாரிகளுக்கு பட்டம்!

வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் 479 அதிகாரிகளுக்கு பட்டம்!

வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பயிற்சி முடித்த 31 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 479 அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் 77-வது பாடப்பிரிவு பயிற்சி அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், நட்பு நாடுகளைச் சேர்ந்த 31 அதிகாரிகள் உட்பட 479 முப்படை அதிகாரிகள் பட்டம் பெற்றனர். கல்லூரி முதல்வர் லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.மோகன் நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அவர் பேசும் போது, "சர்வசேத அளவில் புகழ்பெற்ற முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி வெலிங்டனில் அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உலகின் 5 கண்டங்களில் உள்ள நமது நட்பு நாடுகளை சேர்ந்த 31 அதிகாரிகள் உட்பட 479 பேர் பட்டங்கள் பெற்றுள்ளனர். வெளிநாட்டு அதிகாரிகள் தங்கள் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். இந்த கல்லூரியில் பயின்றவற்றை உங்கள் நாட்டு முப்படை அதிகாரிகள், வீரர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவில் 1500 ராணுவ அதிகாரிகள், 600 கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் என 2100 பேர் மட்டுமே இப்பயிற்சி பெற தகுதி பெறுகின்றனர்.

இப்பயிற்சி முடித்த உங்கள் மீது பொறுப்பு அதிகரித்துள்ளது. நீங்கள் பாதுகாப்புத்துறை இயந்திரத்தின் அங்கமாகி உள்ளீர்கள். அதில் உள்ள சவால்களை சமாளிப்பதன் மூலம் சிறந்த மனிதர்களாக உருவாகும் வாய்ப்புள்ளது. முக்கிய பொறுப்பு ஏற்க உள்ள நீங்கள் நேர்மை பணிவு, இரக்கம், அர்ப்பணிப்பு மற்றும் மன திருப்தியுடன் பணியாற்ற வேண்டும்" என்றார்.

மேலும், கல்லூரியின் இதழான ‘ஹவுல்’ இதழை வெளியிட்டார். நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் நினைவாக கோப்பை நிறுவப்பட்டது. இந்த கோப்பையை மறைந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் பெற்றோர் கர்னல் கே.பி.சிங், உமா சிங் மற்றும் மனைவி சீதாஞ்சலி சிங் ஆகியோர் கோப்பையை அறிமுகப்படுத்தி, 77-வது பாடப்பிரிவில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினர். இந்த கோப்பை ஆண்டு தோறும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், பிரேசில், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளின் முப்படை அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் அவர்களது மனைவிகள் கலந்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in