
நாமக்கல் மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட பேரூராட்சி அலுவலர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து மரணம் அடைந்தது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தங்கள் குறைகளை மனுவாக கொடுக்க வரும் மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
அதன்படி இந்த கூட்டத்தில் படைவீடு பேரூராட்சி அலுவலக உதவியாளர் ஆனந்தன் (56) என்பவரும் தனது அலுவலகம் சார்பில் கலந்து கொண்டார். மற்ற அதிகாரிகளுடன் அவரும் வரிசையில் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு திடீர் என மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர் மயங்கி விழுந்த ஆனந்தனை பரிசோதனை செய்தததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அங்கு வந்திருந்த அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.