மலேசியாவில் மர்ம மரணம்... சிவகங்கையில் பிரேத பரிசோதனை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மலேசியாவில் மர்ம மரணம்... சிவகங்கையில் பிரேத பரிசோதனை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மலேசியாவில் உயிரிழந்தவரின் உடலை சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த எம்.செந்திலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "என் கணவர் மோகனசுந்தரம் பெரியகருப்பன். மலேசியாவில் பாண்டி என்பவர் நடத்தி வரும் கார் சுத்தம் செய்யும் கம்பெனியில் பணிபுரிந்தார். என் கணவர் 25.5.2022-ல் என்னிடம் வீடியோ காலில் பேசினார். அப்போது ஊருக்கு திரும்ப இருப்பதாகவும், ஆனால் பாண்டி ஊருக்கு அனுப்ப மறுப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் என் கணவர் 26.5.2022-ல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

என் கணவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். ஊருக்கு செல்லும் விவகாரத்தில் என் கணவருக்கும், பாண்டிக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. மருத்துவ அறிக்கையில் தலைக்குள் ரத்த கசிவு ஏற்பட்டு கணவர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. கணவரின் இறப்புக்கு பாண்டி காரணமாக இருப்பார் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, கணவரின் உடலை சிவகங்கைக்கு கொண்டு வரும்போது உடலை பாதுகாக்கவும், பிரேத பரிசோதனை நடத்தவும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி வி.சிவஞானம் பிறப்பித்த உத்தரவில், பாண்டி மீது மனுதாரர் சந்தேகம் எழுப்பியுள்ளார். இதனால் மனுதாரரின் கணவர் உடலை பாதுகாக்கவும், பிரேத பரிசோதனை செய்யவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. மனுதாரரின் கணவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரும்போது உடலை பாதுகாத்து, சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த எஸ்பி மற்றும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in