மேகமலை வனப்பகுதியில்
நாட்டு மாடுகளுக்கு அனுமதி: மார்க்சிஸ்ட் கட்சி நம்பிக்கை
கோப்புப் படம்

மேகமலை வனப்பகுதியில் நாட்டு மாடுகளுக்கு அனுமதி: மார்க்சிஸ்ட் கட்சி நம்பிக்கை

மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் நாட்டு மாடுகள், மலை மாடுகள் மேய உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை கூறுகையில், “மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் மலைமாடுகள் மேய்வதைத் தடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தமிழகம் முழுவதும் வனப் பகுதிகளில் மாடுகள் மேய தடை விதிப்பதாக, கடந்த 4-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பால் பாரம்பரிய காடுகளை நம்பி வாழும் பழங்குடிகள், வனவிவசாயிகள், மாடு வளர்ப்போர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பு குறித்து மீண்டும் 17-ம் தேதி மறுபரிசீலனை செய்து திருத்தம் செய்ய இருப்பதாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் அறிவித்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

மேலும், “வனப்பகுதிகளில் நாட்டு மாடுகளுக்குத் தடை விதிப்பது அந்த இனத்தையே அடியோடு அழிப்பதற்குச் சமமாகும். எனவே, வன உரிமைச்சட்டம் 2006-ஐ கணக்கில் எடுத்துக்கொண்டு மேகமலை உள்ளிட்ட சரணாலயங்கள் உள்ள வனப்பகுதிகளில் நாட்டு மாடுகள், மலை மாடுகளை மேய்ச்சலுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம்” என்று அண்ணாமலை கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in