“மதுரைக்குள்ள டிராஃபிக் ஜாமை சரி பண்ணுங்க சார்” - செல்லூர் ராஜூவின் திடீர் கரிசனம்!

“மதுரைக்குள்ள டிராஃபிக் ஜாமை சரி பண்ணுங்க சார்”
 - செல்லூர் ராஜூவின் திடீர் கரிசனம்!
செல்லூர் ராஜு காவல் ஆணையரைச் சந்திக்க வந்தபோது...எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தொடர்ந்து 10 வருடங்கள் அமைச்சராக இருந்திருக்கிறார் செல்லூர் கே.ராஜூ. மதுரைக்குள் அப்போதெல்லாம் அவர் கண்ணுக்குத் தெரியாத போக்குவரத்து நெரிசல் பஞ்சாயத்து, இப்போதுதான் தெரிந்திருக்கிறது போலும். கடந்த புதன் கிழமை தனது பரிவாரங்கள் புடைசூழ வந்து மதுரை மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து, “நான் வந்த விஷயத்தை பெருசுபடுத்திடாதீங்க. மதுரைக்குள்ள எல்லா எடத்துலயும் ரோட்டுல மைய தடுப்பு போட்டு வெச்சிருக்கறதால எங்க பாத்தாலும் போக்குவரத்து நெரிசாலா இருக்கு. ஜிஹெச் (இங்க தான் செல்லூரார் அலுவலகமும் மெடிக்கலும் இருக்கு) பக்கத்துலகூட அப்படித்தான் இருக்கு. நீங்களா பாத்து எதாச்சும் பண்ணுங்க சார்” என்று மனு கொடுத்துவிட்டுப் போனார்.

இந்தியாவின் பழமையான புராதன நகர், கோயில் நகரம் என்றெல்லாம் பெருமை கொண்டிருக்கும் மதுரை மாநகரத்தின் போக்குவரத்து கட்டமைப்பு என்பது, காலம் காலமாகவே மோசமாகத்தான் இருக்கிறது. இதனால், மக்கள் சாலைகளை கடப்பதற்கு நித்தம் நித்தம் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். சிலப்பதிகாரத்திலும், மதுரைக் காஞ்சியிலும் வணிகச் சிறப்புடைய நகரமாக மதுரை பேசப்படுகிறது. இரவும் பகலும் உயிர்ப்புடன் இருப்பதாலேயே மதுரைக்கு ‘தூங்கா நகரம்’ என்ற பெயரும் உண்டு. விருந்தோம்பலுக்கும், சுற்றுலாவுக்கும் பிரசித்தி பெற்ற மதுரை, தற்போது அதன் ஒழுங்கற்ற போக்குவரத்து கட்டமைப்பால் வணிகம், வேலைவாய்ப்பில் பின்தங்கிய நகராக மாறிக் கொண்டிருக்கிறது. மழைக்காலத்தில் மதுரை சாலைகள் தெப்பமாய் தேங்கும் குளங்களாகவும், கோடையில் புழுதி வாரி இறைப்பதுவுமாகவே இருக்கின்றன.

சிறு கிராமங்களின் தொகுப்புதான் மதுரை நகரம் என்பார்கள். மதுரை இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. நகரின் முக்கிய சாலைகள், மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. ஆரம்பத்தில் சிறு சிறு வீதிகளாக இருந்த இந்தச் சாலைகள், தற்போது பெரும் நகரப் போக்குரவத்தைத் தம்கட்ட முடியாமல் மூச்சுத் திணறுகின்றன. இதை உணராமல், நகரின் விரிவாக்கப் பகுதிகளிலும் தொலைநோக்குப் பார்வையில்லாமல் சாலைகள் அமைக்கப்பட்டன. இன்னமும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோரிப்பாளையம் சந்திப்பு
கோரிப்பாளையம் சந்திப்பு

இதனால் நகருக்குள்ளும் நகரத்துக்கு வெளியிலும் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்வதால் மக்கள், நகரின் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விரைவாகச் செல்லமுடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மதுரை நகரப் போக்குவரத்தை மேம்படுத்த, அதிமுக ஆட்சியில் கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. காளவாசல் பகுதியில் ரூ.54 கோடியில் அமைக்கப்பட்ட பாலம்கூட பெரிதாக யாருக்கும் பயன் தரவில்லை. தொலைநோக்கு சிந்தனை இல்லாமல், ‘சுயநோக்கு’ சிந்தனையுடன் இந்தப் பாலத்தை அவசர கதியில் கட்டவைத்த அப்போதைய அமைச்சர் செல்லூர் கே.ராஜூதான், இப்போது போக்குவரத்து நெரிசலைக் குறையுங்கள் என்று மனு கொடுக்கிறார்.

கோரிப்பாளையம், தல்லாகுளம், சிம்மக்கல், பெரியார் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் செல்லும் சாலைகளில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல். இங்கெல்லாம் பறக்கும் சாலைகளை அமைப்போம் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சொன்னதெல்லாம், செல்லூர் ராஜூவுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. இதற்கான இடம் கையகப்படுத்தலுக்காக ரூ.184 நிதி ஒதுக்கியதாகச் சொன்னார்கள். அப்படியும் தினமும் இந்தச் சாலைகள் வழியாகப் போய் வரும் செல்லூர் கே.ராஜூ, இந்தத் திட்டங்களைக் கொண்டுவந்து நகரின் நெரிசலுக்கு தீர்வுகாண எந்த முயற்சியும் செய்யவில்லை.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது பரிவாரங்களுடன் சென்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் கேபி.கார்த்திகேயனைச் சந்தித்த செல்லூரார், ‘நகரின் சாலைகளை மேம்படுத்த வேண்டும், குண்டும், குழியுமாக உள்ளது. கிடப்பில் கிடக்கும் மேம்பாலங்கள் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்’ என்று முறையிட்டார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து, ‘நகரில் வழிப்பறி, கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டது, அதை கட்டுப்படுத்த வேண்டும். போக்குரவத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரின் முக்கிய சாலைகளில் விரைவாகச் செல்ல முடியவில்லை’ என்றெல்லாம் பிரச்சினைகளை அடுக்கினார்.

அங்கேயே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘‘ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் விரைவாக அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடியல. பள்ளி, கல்லூரி மாணவர்கள் சரியான நேரத்திற்கு கல்வி கூடங்களுக்குச் செல்லமுடியல. பணிக்குச் செல்வோர் சிரமப்படுறாங்க. அழகர் கோயில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் இருந்து விமான நிலையம் செல்லும் வாகனங்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியல தம்பிகளா” என்றார்.

அதிமுக ஆட்சியில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூவுக்கு ஏன் அதிகாரமும், பதவியும் கையில் இருந்தபோது இந்த அக்கறை வரவில்லை என்றும், இப்போதுதான் மதுரையில் போக்குவரத்து நெரிசல் இருப்பது அவருக்கு தெரிந்ததா என்றும் மதுரை மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ராஜூ அமைச்சராக இருந்தபோது, எந்த சாலையில் அவர் வந்தாலும் அந்த சாலையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விரைவாக அவர் சாலைகளை கடந்து செல்வதற்கு போக்குவரத்து போலீஸார் உதவினர். தற்போது அவர் வெறும் எம்எல்ஏ-வாக மட்டுமே இருப்பதால்தான் மக்களின் அருமை தெரிகிறது.

இவர்தான் இப்படி என்றால், தற்போதுள்ள திமுக அமைச்சர்களும், கடந்த ஆட்சியின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட ஊழல்களைச் சொல்லிச் சொல்லிக் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். மதுரை மக்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை எப்போது தீரும் என்பது, அந்த மீனாட்சிக்கே வெளிச்சம்!

Related Stories

No stories found.