குமரியில் பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் கணக்கைத் தொடங்கியது கரோனா!

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

கடந்த சில வாரங்களாகவே கன்னியாகுமரி மாவட்டத்தில் பூஜ்ஜியமாகவே இருந்த கரோனா, இப்போது மீண்டும் தன் கணக்கைத் தொடங்கியுள்ளது. இன்று இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தநிலையில் கரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்திக் கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து மக்களும் சகஜமாக சுற்றத் தொடங்கினர். அதேநேரம் மக்கள் சமூக இடைவெளி, மாஸ்க் ஆகியவற்றையும் முற்றாக மறந்துவிட்டனர். இந்நிலையில் அண்மைக் காலமாக மீண்டும் கரோனா வைரஸ் தொற்று தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில வாரங்களாகவே புதிய நோய்த்தொற்றாளர்கள் யாரும் இல்லை. கரோனா வைரஸ் தொற்றின் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை பூஜ்ஜியத்திலேயே இருந்தது. இந்நிலையில் இன்று இருவருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவருக்கும், 23 வயதான இலந்தையடிவிளை பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாலும், லேசான அறிகுறிகளே இருப்பதாலும் வீட்டுத்தனிமையிலேயே இருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கரோனா வார்டும் மூடியே இருக்கிறது. இருந்தும் பூஜ்ஜியத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா மீண்டும் தன் கணக்கைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in