தூக்கி வீசப்பட்ட பேருந்து ஓட்டுநர்... உயிர் தப்பிய பயணிகள்: எடப்பாடியில் நடந்த பயங்கரம்

தூக்கி வீசப்பட்ட பேருந்து ஓட்டுநர்... உயிர் தப்பிய பயணிகள்: எடப்பாடியில் நடந்த பயங்கரம்

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கல்லூரி பேருந்துடன் தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. எடப்பாடி ஏரிசாலை பகுதியை சேர்ந்த அருணாச்சலம் (42), பேருந்தை ஓட்டிச் சென்றார். பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

எடப்பாடியை அடுத்த கோழிப்பண்ணை நிறுத்தம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையில் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியின் பேருந்து ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு எடப்பாடிக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 55 மாணவ, மாணவியர் இருந்தனர். எதிர்பாராத விதமாக இரண்டு பேருந்துகளும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றது. அதே நேரத்தில் கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் முன் பகுதியும் பலத்த சேதமடைந்தது. இதில் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், எடப்பாடி, கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர் அருணாச்சலம் மற்றும் அதில் பயணம் செய்த இருப்புலியை சேர்ந்த சின்னகண்ணன் (60) ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இந்த விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in