அதிகாலையில் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை; தூக்கத்திலேயே பலியான கர்ப்பிணி!

அதிகாலையில் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை; தூக்கத்திலேயே பலியான கர்ப்பிணி!

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி பெண், அவரது தாயார் என இரு பெண்கள் துள்ளத் துடிக்க உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட அண்ணாநகர் 3-வது தெருவில் வசித்துவருபவர் முத்துராமன். இவர் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் உள்ள கழிப்பறையில் கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள்(47). இந்தத் தம்பதியின் மகள் கார்த்திகா என்ற காத்தம்மாளுக்கு (22), செல்வராஜ் என்ற வாலிபரோடு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கார்த்திகா கருவுற்று இருந்தார். அவருக்கு மாப்பிள்ளை செல்வராஜ் வீடான மார்த்தண்டம்பட்டி கிராமத்தில் சொந்தங்களைத் திரட்டி வளைகாப்பு நிகழ்ச்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தினர். வளைகாப்பு முடிந்ததும் பிரசவத்திற்காக தன் வீட்டிற்கு காத்தம்மாளை அழைத்து வந்திருந்தார் முத்துராமன்.

இன்று அதிகாலை முத்துராமன், அவரது மனைவி காளியம்மாள், வளைகாப்பு முடிந்து தாய் வீட்டிற்கு வந்திருந்த கார்த்திகா என்ற கருத்தம்மாள் மூவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பலவீனமடைந்த வீட்டின் மேற்கூரை இடிந்துவிழுந்தது. இதில் தாய் காளியம்மாளும், நிறைமாதக் கர்ப்பிணியான கார்த்திகாவும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். முத்துராமன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார். தூத்துக்குடி, தென்பாகம் போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காளியம்மாள்
காளியம்மாள்

விபத்து நடந்தது எப்படி?

முத்துராமனின் வீடு 50 ஆண்டுகளுக்கு பழமையானது. மேற்கூரை அதனால் பழுதடைந்துள்ளது. அதேநேரம் மேற்கூரையின் பழுதை மறைப்பதாக நினைத்துக்கொண்டு தெர்மாகோலில் சீலிங் அமைத்துள்ளனர். இதனால் வீட்டின் உள்ளே இருந்து பார்க்கும்போது தெர்மாகோல் சீலிங் மட்டுமே தெரிந்தது. தொடர்ந்து மேற்கூரை பழுதாகியே வந்தது கவனத்தில் வராமல் இருந்துவிட்டது. அதேநேரம் அவ்வப்போது மேற்கூரையில் கேட்ட சத்தத்தையும் மேலே எலி ஓடுவதாக நினைத்திருக்கின்றனர். அதுவே இந்த விபத்துக்கு காரணமாகிவிட்டது.

Related Stories

No stories found.