மாசடைந்த குளங்கள்... குறைந்து வரும் வலசை பறவைகளின் வருகை!

கோவையில் நடந்த ஆசிய நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு
கோவை இருகூர் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மத்தியில் இரைதேடிய தாமரை இலைக்கோழி
கோவை இருகூர் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மத்தியில் இரைதேடிய தாமரை இலைக்கோழிhindu

கோவையில் மாசுபட்டுள்ள குளங்களைவிட, மாசு குறைவாக உள்ள குளங்களில் பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததும் ஆசிய நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கோவையில் உள்ள நீர்நிலைகளும், குளங்களும் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகின்றன. உக்குளம், கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, நரசாம்பதி, ஆச்சான்குளம், சின்னவேடம்பட்டி குளம், அக்ரஹார சாமகுளம், காலிங்கராயன் குளம் உள்ளிட்ட குளங்கள், அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள பறவைகளை கண்டறிய ஆசிய நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு (ஏடபுள்யுசி) ஆண்டுதோறும் ஜனவரியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கோவையில் உள்ள 29 குளங்களில் நடைபெற்றது. கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டியைச் (சிஎன்எஸ்) சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். கணக்கெடுப்பின்போது நீர்நிலைகள், அதனையொட்டிய பகுதிகளில் 133 வகை பறவைகள் தென்பட்டுள்ளன. இதில், 27 வகை பறவைகள் வலசை பறவைகள் ஆகும். மேலும், மாசுபட்டுள்ள குளங்களைவிட, மாசு குறைவாக உள்ள குளங்களில் பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பச்சைக்கால் உள்ளான்
பச்சைக்கால் உள்ளான்hindu

இதுகுறித்து சிஎன்எஸ் தலைவர் செல்வராஜ், மூத்த உறுப்பினர் பாவேந்தன் ஆகியோர் கூறுகையில, "பொதுவாக கணக்கெடுப்பின்போது 35 முதல் 40 வகை வலசை பறவைகள் தென்படும். நடப்பாண்டு இது 27 ஆக குறைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இதுவே குறைவாகும். நடப்பாண்டு தென்பட்ட வலசை பறவைகளில் ஊசிவால் வாத்து, செண்டு வாத்து, தட்டை அலகு வாத்து, நீலச்சிறகி, மஞ்சள் கால் கொசு உள்ளான், பச்சைகால் உள்ளான், சாம்பல் வாலாட்டி, மீசை ஆலா, ஆற்று ஆலா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மாசுபட்ட குளங்கள்

குளங்களின் உள்ள பறவைகளின் எண்ணிக்கையை அங்கு கிடைக்கும் உணவு, நீரின் தரம், ஆழம், வாழிடம் ஆகியவை தீர்மானிக்கின்றன. கோவையில் உள்ள பல குளங்கள் கழிவுநீராலும், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றாலும் மாசுபட்டுள்ளன. இயற்கையாக இருந்த குளங்களின் கரைகள் கான்கிரீட் கட்டுமானங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கரையோரம் இரைதேடும் பறவைகள் இரைதேட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. எப்போதும் இங்கேயே இருக்கும் (ரெசிடென்ட் பேர்ட்) பறவைகளில், கணக்கெடுப்போது மொத்தம் 5,858 பறவைகள் தென்பட்டன. வலசை வந்த பறவைகளில் மொத்தம் 1,580 பறவைகள் தென்பட்டன" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in