நகை மோசடி செய்த கூட்டுறவு செயலர், நகை மதிப்பீட்டாளர் பணியிடை நீக்கம்

நகை மோசடி செய்த கூட்டுறவு செயலர், நகை மதிப்பீட்டாளர் பணியிடை நீக்கம்

கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் மற்றும் செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்தச் சங்கத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இங்கு நகை மதிப்பீட்டாளராக சாமிநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக சங்கிலி என்பவர் உள்ளார்.

நகை மதிப்பீட்டாளர் சாமிநாதன், வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகைகளில் இருந்து 159.800 கிராம் தங்க நகைகளை எடுத்து தனது சொந்தத் தேவைக்காகத் தனியார் வங்கியில் அடகு வைத்துள்ளார். செயலாளர் சங்கிலி இதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் தங்கள் நகைகளை மீட்க வந்த வாடிக்கையாளர்களிடம் இருவரும் சாக்குப்போக்கு சொல்லி இழுத்தடித்து வந்திருக்கின்றனர்.

அதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் இது குறித்து புகார் தெரிவித்த நிலையில் இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர்கள் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து‌ கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in