சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த அமித் ஷாவுக்கு முதல்வர் கடிதம்

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த அமித் ஷாவுக்கு முதல்வர் கடிதம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டை மேம்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம், பெருமழை போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு தக்கநேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டு சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்களை எதிர்கொள்ள, உரிய காலத்தில் இந்த மையத்திலிருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், அதன் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது. ஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகள் உரியநேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாதநிலை இருக்கிறது.

டிச.30 அன்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கைபடி, சென்னையில் லேசான மழை பெய்யும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மிக கனமழை பெய்ததால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மிக கனமழை பெய்த பிறகே வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ வெளியிட்டது. இதனால் உரிய நேரத்தில் மருத்துவ சேவை போன்ற நடவடிக்கைகளை எடுக்கமுடியாமல் போனது.

வானிலை ஆய்வு மையத்தின் இந்த இயலாமை உயிர், உடைமை இழப்புகள் ஏற்படவும், முக்கியமான கட்டமைப்புகள் சேதமடையவும் காரணமாக அமைந்துவிடுகிறது. இதனால் சென்னை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தக் கூடுதல் முதலீடு செய்யவேண்டும்’ என முதல்வர் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in