`நிர்க்கதியாகிவிட்டேன்'- கணவர், மகனை இழந்த பெண், முதல்வர் ஸ்டாலினிடம் கதறல்

`நிர்க்கதியாகிவிட்டேன்'- கணவர், மகனை இழந்த பெண், முதல்வர் ஸ்டாலினிடம் கதறல்

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, திருநாவுக்கரசு சுவாமிகள் சித்திரை சதய விழாவின்போது சப்பரத்தின் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டிருந்தது. அந்த 11 பேரின் வீடுகளிலும் அவர்களின் உடல்கள் முதல்வரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நேராக வந்த முதல்வர் முதலில் 15 வயது சிறுவன் சந்தோஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஏற்கெனவே கணவரை இழந்த சந்தோஷின் தாயார் தற்போது மகனை இழந்த சோகத்தில் முதல்வரை கண்டதும் கதறி அழுதார். அவரிடம் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.

அதேபோல அந்த ஊரில் இறந்த அனைவரின் வீட்டிற்கும் நடந்தே சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி, நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார். வடக்குத்தெருவில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரும் அவர் மகன் ராகவனும் உயிரிழந்தனர். அந்த குடும்பத்தினர் தங்கள் நிர்க்கதியாக ஆகிவிட்டோம் என்று முதல்வரிடம் கதறினார்கள். நாங்கள் இருக்கிறோம், பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்களுக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.

அதனை அடுத்து சப்பரத்தின் மீது மின்சாரம் பாய்ந்த இடத்துக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அடுத்ததாக நேராக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு சிகிச்சை பெற்று வரும் 15 பேரையும் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிவாரணத் தொகையை வழங்கினார். அங்குள்ள மருத்துவர்களிடம் அவர்களுக்கு தேவையான உயர் சிகிச்சை வழங்கவும் அவர் அறிவுறுத்தினார்.

முதல்வருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர்.

Related Stories

No stories found.