முறைகேடு வழக்கில் மேயர்களை சேர்க்க கோரிய வழக்கு எச்சரிக்கையுடன் தள்ளுபடி

முறைகேடு வழக்கில் மேயர்களை சேர்க்க கோரிய வழக்கு எச்சரிக்கையுடன் தள்ளுபடி

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளில், சம்பந்தப்பட்ட காலத்தில் மேயர்களாக இருந்தவர்களையும், அதிகாரிகளையும் சேர்க்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, மனுதாரருக்கு எச்சரிக்கை செய்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் பலநூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் சென்னை மற்றும் கோவை மேயர்களாக பதவி வகித்தவர்களையும், அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்க்க உத்தரவிடக் கோரி நேர்வழி இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், டெண்டர்களுக்கு ஒப்புதல் அளித்து மேயர்கள்தான் கையெழுத்திட்டுள்ளதாகவும், அவர்கள் வழக்கில் சேர்க்கப்படாதது அதிர்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால், சம்பந்தப்பட்டவர்களை சேர்க்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எந்த நடைமுறையும் தெரிந்து கொள்ளாமல், எல்லாவற்றுக்கும் பொதுநல வழக்கு தொடர்வது என்பது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதாகும் என்றும் கோரிக்கை மனுக்களை பரிசீலிக்கும்படி உத்தரவிடக்கூடாது என உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறிய நீதிபதிகள், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர்.

இதையடுத்து, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.