6 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கலாகிறது சென்னை மாநகராட்சி பட்ஜெட்

6 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கலாகிறது சென்னை மாநகராட்சி பட்ஜெட்

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் மாமன்றத்தில் வரும் 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் பட்ஜெட் தாக்கல் செயப்படுவதால், வரிகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அப்போதைய கமிஷனர்களால் மறைமுகமாகவே வெளியிடப்பட்டு வந்தது. இதனால் பெரிய அளவில் புதிய திட்டங்கள் இல்லாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றனர். இதையடுத்து சென்னையின் 49-வது மேயராக ஆர்.பிரியா பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து நிலைக்குழு, மண்டலக்குழு, நியமனக் குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் வரும் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்காக சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய திட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போதைய வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சந்தானம், அன்றைய மேயர் சைதை துரைசாமி முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்தவகையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் சனிக்கிழமை, மாமன்ற கூட்டத்தில் பட்ஜெட் அறிக்கையை மேயர் ஆர்.பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் சென்னை மாநகர மக்கள் மத்தியில் புதிய நல திட்டங்கள் இருக்கும் என பல்வேறு எதிர்பார்ப்புகள் மிகுதியாக உள்ளன. மேலும் சொத்து மற்றும் இதர வரிகள் உயர்த்தப்படலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இந்த பட்ஜெட்டில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால், மேம்பாலங்கள், புதிய திட்டங்கள் இடம்பெறும் என மேயர் ஆர்.பிரியா ஏற்கெனவே தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in