தக்காளிக்கு துப்பாக்கி பாதுகாவலர் தேவை
தக்காளிக்கு துப்பாக்கி பாதுகாவலர் தேவை

தக்காளிக்கு துப்பாக்கி பாதுகாவலர் தேவை!

பிரியாணி கடையின் சுவையான விளம்பரம்

எகிறும் தக்காளி விலை பொதுமக்களை மட்டுமன்றி உணவகங்களையும் புலம்ப வைத்திருக்கிறது. தங்கள் வசமிருக்கும் தக்காளிகள் அடங்கிய பெட்டிகளை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் தேவை என உணவம் ஒன்று விளம்பரம் செய்திருக்கிறது.

தக்காளி விலையேற்றத்தை தாக்குப்பிடிக்காத வெகுஜனங்கள் சமூக ஊடகங்களில் மத்திய மாநில அரசுகளைச் சாடியும், தக்காளி மீம்ஸ்களை பரப்பியும் ஆசுவாசமடைகிறார்கள். இந்த களேபரங்களுக்கு மத்தியில், மீம்ஸா விளம்பரமா அல்லது சமூக விழிப்புணர்வுப் பதிவா என கணிக்க வாய்ப்பில்லாத பதிவொன்று பலரையும் வெகுவாய் கவர்ந்தது.

அது, சென்னையில் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் பிரியாணி கடை ஒன்றின் சார்பில் வெளியான வேலைவாய்ப்பு விளம்பரம். தங்களது உணவகங்களுக்கான தக்காளி பெட்டிகளையும், கேஸ் சிலிண்டர்களையும் பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் தேவை என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை என்றும் கூடுதலாக தெரிவித்திருந்தார்கள்.

இந்தப் பதிவை பார்ப்பவர்களுக்கு, மெய்யாலுமே இது பாதுகாவலர் தேடும் விளம்பரமா அல்லது தக்காளி மற்றும் எரிவாயு விலையேற்றத்தை இடித்துரைக்கும் பகடியா என்ற ஐயம் எழும். காமதேனு இணையதளத்திடம் பேசிய இந்தப் பதிவைச் செய்தவர்களான, தொப்பிவாப்பா பிரியாணி கடையின் நிர்வாகிகள், “ நீங்கள் குறிப்பிடும் இரண்டும்தான்..” என ஒப்புக்கொண்டனர்.

“சென்னையில் மட்டும் எங்களுக்கு 6 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்காக பெட்டி பெட்டியாய் தக்காளி வாங்கி வைக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமன்றி கேஸ் சிலிண்டர்களையும் அடுக்கி வைத்துள்ளோம். தற்போதுள்ள விலைவாசி சூழலில் மிகவும் மதிப்புமிக்க இந்தப் பொருட்களை பாதுகாப்பதில் தென்படும் தடுமாற்றத்தைப் போக்கவே, பாதுகாவலர் கோரி விளம்பரம் செய்திருக்கிறோம்” என்று உணவக நிர்வாகிகளில் ஒருவரான புவனேஷ்வரன் விளக்கமளித்தார்.

பொதுவெளியில் விவாதத்துக்குள்ளாகும் அம்சங்களை குறிவைத்து, அவை தொடர்பான சமூக விழிப்புணர்வு மற்றும் இடித்துரைப்புக்காக இவர்கள் மீம்ஸ் மற்றும் விளம்பரங்கள் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு வெங்காய விலையேற்றத்தின்போதும் இதேபோன்று துப்பாக்கி பாதுகாவலர் கோரி விளம்பரம் செய்திருந்தனர். இவற்றுக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும் இருக்கிறதாம்.

திமுகவைச் சேர்ந்த சிலர் ஒரு பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு, பணத்துக்குப் பதில் குத்துகளை தந்துச் சென்றதன் அடிப்படையில், தங்கள் கடையின் பிரியாணி அண்டாக்களை பாதுகாக்க ’பாக்ஸர்கள்’ வேண்டும் என்று தொப்பிவாப்பா செய்த விளம்பரத்தை உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் சிலாகித்திருக்கிறார். ஆனால், பெட்ரோல் விலை உயர்வு காலத்தில் பிரியாணி வாங்குவோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவித்தபோது பலர் அன்பாக மிரட்டினார்களாம்.

இவர்களுடைய இந்த அனுபவத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்களும் உண்டு. 5, 10 பைசா நாணயங்களுக்கு பிரியாணி என்று அறிவித்தபோது, பல இளைஞர்கள் மேற்படி நாணயங்களுக்காக தாத்தா, பாட்டி என அறுபட்டுப்போயிருந்த கிராமத்துச் சொந்தங்களை தொடர்பு கொண்டதும், அதன் மூலமாகப் பழைய பந்தம் புதிதாகக் கிளைத்ததையும் பெருமையாக நினைவுகூர்கிறார்கள்.

விளம்பரம், சமூக விழிப்புணர்வு இரண்டையும் சேர்த்தே மேற்கொள்ளும் இவர்களின் முயற்சிகளுக்கு, சமூக ஊடகங்களில் தனி ரசிகர்கள் சேர்ந்திருக்கிறார்கள். சர்ச்சைக்குரிய பதிவுகள், விளம்பரங்களின் போது அவர்களே பிரியாணி கடை சார்பாக அணிதிரண்டு பதில் இடுவதும் உண்டாம்.

பேட்டியின் அப்டேட் குறித்து மீண்டும் தொடர்பு கொண்டவர்கள், தக்காளி பெட்டிகளைப் பாதுகாக்க முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் முன்வந்திருப்பதாகவும், அவருக்கான துப்பாக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சீரியசாக தெரிவித்தனர்.

இந்தத் தக்காளி விலையேற்றம் இன்னும் எத்தனை சம்பவங்களை வைத்திருக்கிறதோ, தெரியவில்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in