சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

முதற்கட்டமாக அண்ணாசாலையில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான பணிகளில் அந்தந்த காவல் மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர்கள் வகுத்து கொள்ளலாம் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியான வாலாஜா சாலையிலிருந்து பல்லவன் சாலைக்கு செல்லக்கூடிய வழியை போக்குவரத்து போலீஸார் இன்று அடைத்தனர். குறிப்பாக திருவல்லிக் கேணியிலிருந்து வாலாஜா சாலை வழியாக பல்லவன் சாலைக்கு திரும்பும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அண்ணாசாலை தாராபூர் டவர்ஸ் மற்றும் பிளாக்கர்ஸ் சாலை வழியாக அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் அண்ணா சாலையிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் டேம்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, பிளாக்கர்ஸ் சாலை வழியாக அனுப்பப்படுகின்றன. சிம்சன் சிக்னல், வாலாஜா சாலை, தாராபூர் டவர்ஸ் என குறுகிய இடைவெளியில் மூன்று சிக்னல்கள் இருப்பதால் பீக் அவர்ஸில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மேலும் ரிச்சி தெரு அருகே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்திருப்பதாகவும், வாகன ஓட்டிகளிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து நீட்டிப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான பணிகளில் 20 போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in