
விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கும், அயனாவரம் உதவி ஆணையர் சரவணனை தென்மண்டல காவல்துறைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் கடந்த 18-ம் தேதி விக்னேஷ் என்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். விக்னேஷை காவல் துறையினர் அடித்து கொலை செய்து விட்டதாக அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காவலர் பவுன்ராஜ், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக், தலைமை காவலர் எழுத்தர் முனாப், குமார், சந்திரகுமார், ஜெகஜீவன் ஆகிய 6 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கும், அயனாவரம் உதவி ஆணையர் சரவணனை தென்மண்டல காவல்துறைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.