செல்போன் கேம்; தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

செல்போன் கேம்; தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
மாதிரி படம்

படிக்காமல் தினமும் செல்போனில் ப்ரிஃபயர் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால், 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை, கொளத்தூர் லட்சுமிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மீனா(47). இவர் தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகின்றார். கணவர் தனசேகருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, கடந்த 7 ஆண்டுகளாக மீனா கணவரை பிரிந்து தனது 16 வயது மகனுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

இவரது மகன் கொளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் ப்ரிஃபயர் கேமுக்கு அடிமையாகி, படிக்காமல் தினமும் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த மீனா, பலமுறை தனது மகனை கண்டித்துள்ளார். இதைப் பொருட்படுத்தாமல் மகன் கேம் விளையாடி வந்ததால், கோபத்தில் கடந்த 4 நாட்களாக மகனிடம் பேசாமால் இருந்துள்ளார் மீனா.

நேற்று வழக்கம்போல் மீனா வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த மீனா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகன் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் மீனா இதுகுறித்து புழல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அங்கு வந்த போலீஸார் மாணவன் உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா தொற்று காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆன்லைன் கேம், சூதாட்டத்தில் மூழ்கி பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த வரிசையில் பள்ளி மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆன்லைன் கேமில் மூழ்கி இருப்பதைப் பெற்றோர் கண்டிக்கும்போது, தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையும் அரங்கேறி வருகின்றது.

மத்திய, மாநில அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், தொடர்ந்து வெவ்வேறு பெயரில் புதுப்புது சூதாட்ட விளையாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் தற்கொலை சம்பவங்களும் தொடர்கதையாகின்றன.

Related Stories

No stories found.