நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கு: முன்ஜாமீன் கேட்டு இருவர் மனு

நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கு: முன்ஜாமீன் கேட்டு இருவர் மனு

ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் இரண்டு பேர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மதுரையைச் சேர்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகியோர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், "மதுரை கோரிப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் ரஹ்மத்துல்லா, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசை மிரட்டும் விதத்தில் பேசியதாக தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எங்களையும் போலீஸார் சேர்த்துள்ளனர்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிறுபான்மையினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த அடிப்படையில் கோரிப்பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்களையும் வழக்கில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆளுநரான வழக்கறிஞர், ‘ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை மட்டுமே நாங்கள் செய்தோம். மத்திய அரசுக்கு எதிராக எதுவும் பேசவில்லை’ என்றார். அரசு தரப்பில், ‘ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸில் அனுமதி பெறப்படவில்லை. மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை மார்ச் 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in