மாடுகள் மோதி கவிழ்ந்த கார்; வாகன ஓட்டிகள் அச்சம்

மதுரை சாலைகளில் திரியும் மாடுகள்
மாடுகள் மோதி கவிழ்ந்த கார்; வாகன ஓட்டிகள் அச்சம்

‘கரோனா’ ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு நகரச் சாலைகளில் போக்குவரத்து பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், வழக்கம்போல் மாடுகள் சாலைகளில் படுத்துத் தூங்குவதும், குறுக்கும், நெடுக்குமாக பாய்வதுமாக இருக்கின்றன. இதனால், அபாயகரமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனங்களை இயக்கவே அச்சமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மதுரையில் நேற்று கூடல் நகர் பகுதியில், சாலையின் நடுவில் பாய்ந்த மாடுகள் வேகமாக வந்த கார் மீது மோதியதில், கார் தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுபோன்ற விபத்துகள் தினமும் நடக்கின்றன.

முன்பு மாடுகளைப் பிடித்து அபராதம் விதித்த மதுரை மாநகராட்சியும், காவல் துறையும் தற்போது அந்த நடவடிக்கையை கைவிட்டதால், மதுரை சாலைகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

இதுகுறித்து மதுரை நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த அபுபக்கர் கூறும்போது, ‘‘வைகை ஆற்றுக் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் கறவை மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காலையில் பால் கறந்துவிட்டு அவிழ்த்துவிடுகின்றனர். மேய்ச்சலுக்குப் பிறகு இந்த மாடுகள், நகரச் சாலைகளில் புகுந்து கூட்டமாகப் படுத்துவிடுகின்றன. அப்போது வாகனங்களின் ஹாரன் சத்தத்தில் மிரண்டு ஓட்டம்பிடிக்கும் மாடுகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் மீது மோதிவிடுகின்றன. இதில், வாகனங்கள் சேதம் அடைவதோடு வாகன ஓட்டிகளும் பயணிகளும் பொதுமக்களும் காயமடைகின்றனர்.

மாலை நேரங்களில் ஒத்தக்கடை, திருவாதூர் சாலைகள் நிரந்தரமாகவே கால்நடைகளின் மாட்டுத்தொழுவமாகவே மாறிவிட்டன. வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தபடியே ஊர்ந்துசெல்வது வாடிக்கையாக உள்ளது. மாடுகளைப் பிடித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், உள்ளூர் பிரமுகர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுவதால், கடந்த சில வாரமாக சாலைகளில் கால்நடைகள் அட்டகாசம் அதிகரித்துவிட்டது’’ என்றார்.

‘மதுரை சாலைகளில் நிற்கும் போக்குவரத்து போலீஸார், ஹெல்மெட், முகக்கவசம் போடாதவர்களை விரட்டி விரட்டிப் பிடித்து அபராதம் விதித்து கடமையாற்றுகின்றனர். ஆனால், அருகிலேயே தினமும் நகரப் போக்குவரத்தை நிலைகுலையச் செய்யும் மாடுகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று வாகன ஓட்டிகள் வேதனையுடன் செல்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in