பட்டன் பேட்டரியை விழுங்கிய எல்கேஜி குழந்தை: வினையான விளையாட்டு!

பட்டன் பேட்டரியை விழுங்கிய எல்கேஜி குழந்தை: வினையான விளையாட்டு!

சென்னை அயனாவரம் வடக்கு மாடவீதி தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கணேஷ். இவரது நான்கரை வயது மகள் தனுஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு குழந்தை தனுஸ்ரீ வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது பட்டன் வடிவிலான பேட்டரி ஒன்றை குழந்தை எடுத்து விழுங்கியது. பின்னர் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், பேட்டரி தொண்டையில் சிக்கி கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் குழந்தையை மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனுஸ்ரீக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து பேட்டரியை கழிவு மூலம் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து குழந்தையின் பாட்டி காஞ்சனா கூறுகையில், வீட்டில் குழந்தை விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விளையாட்டு சாமானில் இருந்த பட்டன் பேட்டரியை குழந்தை எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டதாக தெரிவித்தார். பின்னர் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பார்த்தபோது தான் குழந்தை பேட்டரியை விழுங்கியது தெரியவந்தது. உடனே குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக தெரிவித்தார். எனவே குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் கொடுக்கும் போது வாயில் போடும் அளவிற்கு சிறிய பொருட்களை கொடுக்கக்கூடாது, இருப்பினும் முடிந்தவரை குழந்தை விளையாடும் போது அவருடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.