
விடுமுறை நாளில், வெயிலின் தாக்கத்தை குறைக்க உல்லாச குளியல் போடுவதற்காக குளத்துக்குச் சென்ற பள்ளிச் சிறுவர்கள் மூவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் அஸ்வின்ராஜ் (14), முரளி (12). அவரது அண்ணன் மணிகண்டன் (16). ஒரே பள்ளியில் படிக்கும் இவர்கள் மூவரும் நண்பர்கள். தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கும் நிலையில் இன்று மதியம் இவர்கள் மூவரும் குளத்தில் குளிக்கலாம் என்று முடிவு செய்தனர்.
அதனையடுத்து கீழ பூசாரிபட்டியில் உள்ள பாப்பான்குளத்துக்கு மூன்று பேரும் குளிக்கச் சென்றுள்ளனர். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் குளத்தினுள் மூழ்கினர். நீச்சல் தெரியாததால் கரைக்கு வர முடியாமல் நீரில் தத்தளித்தனர். தங்களை காப்பாற்றுமாறு அலறி துடித்தனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த கரையில் நின்ற சிறுவன் ஒருவன் ஓடிப்போய் கிராம மக்களிடம் விவரத்தை சொன்னான்.
அதனையடுத்து உடனே விரைந்து வந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பார்த்தபோது சிறுவர்களை காணவில்லை. அவர்கள் நீருக்குள் மூழ்கி இருக்கலாம் என்பதை உணர்ந்த இளைஞர்கள் உடனடியாக குளத்திற்குள் குதித்து சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட தேடலுக்கு பிறகு உயிரிழந்த நிலையில் 3 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாடு போலீஸார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.