இருபுறமும் பெண்கள்... நடுவில் நாஞ்சில் சம்பத்... பாஜகவினருக்கு தண்ணிகாட்டிய போலீஸ்

இருபுறமும் பெண்கள்... நடுவில் நாஞ்சில் சம்பத்... பாஜகவினருக்கு தண்ணிகாட்டிய போலீஸ்
காரை முற்றுகையிடும் பாஜகவினர்

திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தி, அவருக்கு எதிரான கண்டன போராட்டத்தையும் நடத்தினர் கடலூர் மாவட்ட பாஜகவினர்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று வருகை தந்தார். அவருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை நாஞ்சில் சம்பத் ஒருமையில் பேசியதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரி நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருந்தது.

இதனால் நிகழ்ச்சி நடைபெறும் தனியார் பள்ளி வளாகம், அதற்கு செல்லும் சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். நாஞ்சில் சம்பத் வந்தால் அவருக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் அங்கு திரண்டிருந்தனர்.

பாஜகவினர் திரண்டிருப்பதை அறிந்த போலீஸார் உடனடியாக அங்கு வந்து அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது நாஞ்சில் சம்பத் பயணித்த காரும் அங்கு வந்துவிட்டது. பாஜகவினர் அவரது காரை முற்றுகையிட்டு உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். கொடிக் கம்புகளாலும் கைகளாலும் காரை தாக்கினர். போலீஸார் அவர்களை அகற்ற முயன்றபோது, போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாஞ்சில் சம்பத்தை காரின் நடுப்பகுதியில் உட்கார வைத்து, இருபுறமும் பெண்களை அமரவைத்து அவர் காரில் இருப்பது தெரியாத வண்ணம் காரை மிக வேகமாக பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் விருத்தாசலம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஒரு தலைமைக் காவலர் ஆகியோர் லேசான காயமடைந்தனர். பாஜகவினர் சிலரும் இதில் காயமடைந்தனர்.

இதுபற்றி தகவலறிந்து வந்த கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அந்தோணிராஜ், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிசெய்து, பாஜகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி கடலூர் மாவட்டத் தலைவர் மணிகண்டன் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், நாஞ்சில் சம்பத் பயணித்த கார் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதோடு, காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மீதும் அவர் கார் மோதியது. அதனால் காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.