
நெல்லை மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப் மற்றும் 5 பாதிரியார்களுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி எம்.சாண்ட் குவாரிக்கு அனுமதி பெற்று, சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி, சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா பிஷப் சாமுவேல் மார் இரேனியஸ் (69), பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல் புத்தன்விளையில் (56), ஷாஜி தாமஸ் (58), ஜியோ ஜேம்ஸ் (37), ஜோஸ் கலாவிலா (53), ஜோஸ் சாமகலாயில் (69) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் ஜாமீன் கேட்டு நெல்லை முதலாவது நீதித் துறை நடுவர் மன்றம், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடியானது. இதையடுத்து 6 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், மணல் கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மணல் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சொத்து பத்தினம்திட்டா மறைமாவட்டத்துக்கு சொந்தமான இடம். அதை எம்.சாண்ட் குவாரி நடத்த குத்தகைக்கு வழங்கியிருந்தோம். அந்த நிலத்தின் உரிமையாளர்கள் என்பதால், எங்களை போலீஸார் கைது செய்துள்ளனர். எனவே, எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி கே. முரளி சங்கர் விசாரித்தார். பின்னர், “மனுதாரர்கள் 6 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது. பிஷப் சாமுவேல் மார் இரேனியஸ், ஜோஸ் சாமகலாயில் ஆகியோர் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். மற்றவர்கள் தினமும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.