சாலையில் பற்றி எரிந்த பல்சர் பைக்... உயிர் தப்பிய மெக்கானிக்: சென்னையில் அதிர்ச்சி

சாலையில் பற்றி எரிந்த பல்சர் பைக்... உயிர் தப்பிய மெக்கானிக்: சென்னையில் அதிர்ச்சி

சென்னை சாலையில் சென்று கொண்டிருந்த பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக மெக்கானிக் உயிர் தப்பினார்.

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் அருண் ராமலிங்கம் (24). இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தியாகராய நகரில் இருந்து பல்சர் பைக் ஒன்றை பழுது பார்ப்பதற்காக ஓட்டிச் சென்றார். அபிராமபுரம் ரெயீன் டிரீ ஹோட்டல் அருகே வந்தபோது திடீரென பைக் தீப்பிடித்து புகைவர ஆரம்பித்தது.

இதனைப் பார்த்து சுதாரித்துக்கொண்ட மெக்கானிக் அருண் ராமலிங்கம், இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கும்போது தீ மளமளவென பரவியது. பின்னர் அருண் ராமலிங்கம் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் தீ இருசக்கர வாகனம் முழுவதும் பரவியது. தீயை அணைக்க முற்பட்ட மெக்கானிக் அருண் ராமலிங்கத்திற்கு கைகளில் லேசான தீக்காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மந்தைவெளி தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பைக் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து அபிராமபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in