தமிழிசை பங்கேற்கவிருந்த சிலை திறப்பு நிகழ்ச்சி ரத்து ஏன்?

தமிழிசை பங்கேற்கவிருந்த   சிலை திறப்பு நிகழ்ச்சி ரத்து ஏன்?
தமிழ் பல்கலைக்கழகம்

தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்ளவிருந்த பாரதியார் சிலை திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது. அதே நேரத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டு ஆய்வரங்க நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு ஆய்வரங்கம் நாளையும் ( மார்ச் 30 ) நாளை மறுதினமும் நடைபெறுகிறது. இது ஆய்வரங்கத்தின்போது பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவுவதற்காக விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் சார்பில் பாரதியாரின் உருவச்சிலை ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநரும், தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நாளை காலையில் திறந்துவைப்பதாக இருந்தது. இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகளும் நடைபெற்று வந்தன. ஆனால், பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு அனுமதி இன்றியும், தமிழக அரசின் ஆலோசனை பெறாமலும், ஒரு தனி நபர் செய்து கொடுத்த பாரதியார் சிலையை தமிழ் பல்கலைக் கழகத்தில் நிறுவக்கூடாது அரசியல் கட்சிகளும் பிற இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து நாளை 30-ம் தேதி தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற இருந்த பாரதியார் சிலை திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாரதியார் நினைவு நூற்றாண்டு ஆய்வரங்க நிகழ்ச்சி தொடர்ந்து இரு நாட்களும் நடைபெறும். ஆய்வரங்க முதல்நாள் நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்வதில் எந்த மாற்றமும் இல்லை என பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.