ஒரு மாதம் வார்டு பாயாக பணியாற்றவும்: நிபந்தனையுடன் பைக் ரேஸ் வாலிபருக்கு ஜாமீன்

ஒரு மாதம் வார்டு பாயாக பணியாற்றவும்: நிபந்தனையுடன்  பைக் ரேஸ் வாலிபருக்கு ஜாமீன்

ஸ்டான்லி மருத்துவமனையின் விபத்து அவசர சிகிச்சைப்பிரிவில், வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், பைக் ரேசில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரைச் சேர்ந்த 21 வயதான பிரவீன் கடந்த 20-ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸ் சென்றுள்ளார். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் என்பவர் அளித்த புகாரில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் பிரவீன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரவீன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், அஜித்குமார் என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்ததாகவும், எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், பைக் ரேஸில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இருந்ததாலேயே கைது நடவடிக்கை எடுத்ததாகவும், பொதுசாலையில் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மாத காலம் பணியாற்ற வேண்டும். தனது பணி அனுபவம் குறித்து நாள்தோறும் அறிக்கையாக தயார் செய்து மருத்துவமனை முதல்வருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு மாத கால பணி முடிந்ததும், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய பிரவீன் மேற்கொண்ட பணி குறித்து ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தார். தொடர்ந்து, சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்புக் கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் தொணியில் செயல்படுவதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

Related Stories

No stories found.