அய்யாக்கண்ணுவின் போராட்டத்தால் திணறியது போலீஸ்

அய்யாக்கண்ணுவின் போராட்டத்தால் திணறியது போலீஸ்

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஆர்ப்பாட்டம் நடத்தியது மட்டுமல்லாமல் முற்றுகை போராட்டம், காத்திருப்பு போராட்டம், படுத்துறங்கும் போராட்டம் என்று பல்வேறு விதமாக போராட்டங்களை நடத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தை பரபரப்பாக்கினார். இதனால் காவல்துறையினரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேகேதாட்டு அணைகட்ட முயற்சிக்கும், அதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டிக்க வேண்டும், ஆற்றில் மணல் எடுப்பதையும், மணல் குவாரிகள் அமைப்பதையும் நிறுத்த வேண்டும், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி நெல்லுக்கு 1 குவிண்டாலுக்கு ரூ.2500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000-ம் வழங்க வேண்டும். இதர பயிர்களுக்கும் கட்டுப்படியான லாப விலை தர வேண்டும்.

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ நெல்லுக்கு ரூ.35 முதல் ரூ.60 வரை லஞ்சம் பெறுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும், தேங்காய்க்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும், வேளாண் கூட்டுறவு சங்கம் அறிவித்தபடி அனைத்து பயிர்களுக்கும் கடனை முழுமையாக கொடுக்க வேண்டும், 60 வயதடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.5000 வழங்க வேண்டும்.

விவசாய விளைப்பொருட்களுக்கு பிரதமர் அறிவித்தபடி இரண்டு மடங்கு விலையை தர வேண்டும், அதுவரை விவசாயிகள் விவசாயத்திற்கு வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன்களுக்கு ஜப்தி செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதற்காக காலை 11 மணியளவில் ஆட்சியர் அலுவலகம் வந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் முதலில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அதற்குப் பிறகு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தார்கள். அடுத்து ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அலுவலகத்தின் உள்ளே சென்று வரவேற்புக் கூடத்தில் படுத்து உறங்கும் போராட்டத்தை நடத்தினர். ஆட்சியர் வந்து தங்களிடம் நேரடியாக மனுவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதுவரை காத்திருக்க போவதாகவும் அறிவித்தனர். அதற்குப் பிறகு சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்துவிட்டு சாலைக்கு சென்றனர். ஆனால் உடனடியாக திரும்பி வந்து மீண்டும் ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து இருந்தனர்.

திடீரென விவசாயிகளில் ஒருவர் ஆடைகளை களைந்து விட்டு நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அங்கிருந்தோர் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற அவரை போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இவர்களின் எந்த கோரிக்கையையும் ஆட்சியர் அளவில் தீர்த்து வைக்க முடியாது என்ற போதிலும் ஆட்சியர் நேரில் வந்து தங்களிடம் மனுவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். சுமார் இரண்டு மணிநேர அலைக்கழிப்புக்கு பின்னர் தங்கள் பிடிவாதத்தை கைவிட்டு ஆட்சியரை சந்திக்க அய்யாக்கண்ணு மாடிக்குச் சென்றார். ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு அதன் பின்னரே விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இப்படி இவர்களின் திடீர் விதவிதமான போராட்டங்களால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் திண்டாடிப் போயினர். மக்கள் குறை தீர்ப்பு நாள் என்பதால் தங்கள் குறைகளை தெரிவிக்க அதிக அளவில் பொதுமக்களும் ஆட்சியர் அலுவலகம் வந்து இருந்தனர். அவர்களும் இதனால் சிரமத்துக்கு உள்ளாகினர்.

Related Stories

No stories found.