ஆவடி நரிக்குறவர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்

ஒரு வாரத்தில் ஊருக்கு வருவதாக உறுதி
ஆவடி நரிக்குறவர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்

சென்னை ஆவடியில் உள்ள நரிக்குறவர் சமூக மக்களிடம் வீடியோ காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசி இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார்.

சென்னை ஆவடியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மாணவிகள் திவ்யா, ப்ரியா, தர்ஷினி ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, தங்கள் ஊருக்கு வர வேண்டும் என்றும் எங்கள் படிப்புக்கு தந்தையைப் போல் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மாணவிகளின் இந்த கோரிக்கையை கேட்டு நெகிழ்ந்துபோன முதல்வர், உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், "தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல. நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து திராவிட மாடலில் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்க நிலையில் ஆவடியில் உள்ள நரிக்குறவர் சமூக பெண்கள், மாணவிகளிடம் வீடியோ காலில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஒரு வாரத்தில் ஆவடி நரிக்குறவர் காலனிக்கு நேரில் வருவதாக உறுதியளித்த முதல்வரிடம், தங்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்வர் கூறினார்.

நான் வந்தால் சாப்பாடு தருவீங்களா என்று முதல்வர் கேட்டபோது, ஐயா நீங்கள் வாங்க. உங்களுக்கு விருந்தே வைத்துவிடுகிறோம்" என்று ஒரே குரலில் மக்கள் கூறினர். "முதல்வர் வீடியோ காலில் பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது" என்று நரிக்குறவர் சமூக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in