`ஆந்திராவைப் போல் ஆட்டோக்களுக்கு எஃப்சி எடுக்க ரூ.10 ஆயிரம் கொடுங்கள்'

புதுச்சேரி முதல்வரிடம் முறையிட்ட தொழிற்சங்கத்தினர்
`ஆந்திராவைப் போல் ஆட்டோக்களுக்கு எஃப்சி எடுக்க ரூ.10 ஆயிரம் கொடுங்கள்'
முதல்வரிடம் மனு அளிக்கும் தொழிற்சங்கத்தினர்

புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 7 மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஆட்டோ எப்சி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் கே.சேதுசெல்வம் தலைமையிலான தொழிற்சங்கத்தினர் புதுச்சேரி தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை இன்று சந்தித்து உயர்த்தப்பட்டுள்ள ஆட்டோ எப்சி கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். அவர்களின் மனுவில், "கரோனா காலத்தில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. குறிப்பாக, பொதுமுடக்கத்தின் போது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்ட காலத்திற்கு ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு எப்சி கட்டணம் கட்டுவதற்கு போக்குவரத்து துறை நெருக்கடி செய்தது.

வாகனங்கள் ஓடாத காலத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு எப்சி கட்டணத்தை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தொழிற்சங்கம் சார்பில் நீண்ட போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு, எப்சி கட்டணம் 6 மாதத்திற்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது 700 ரூபாயாக உள்ள ஆட்டோ எப்சி கட்டணத்தை, திடீரென 4600 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்த தொழிலை நம்பியுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டணமின்றி இன்சூரன்ஸ் கட்டணமாக ஆட்டோ ஒன்றுக்கு ரூபாய் 8000, சாலை வரியாக ரூபாய் 1500 கட்ட வேண்டிய நிலை இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் ஆட்டோ எப்சி எடுப்பதற்கு முன்னர், வண்டியை டிங்கரிங் வேலை, பெயிண்டிங் வேலை, லைனர் வேலை, மெக்கானிக் கூலி என 30,000 ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பெட்ரோல் விலையும் தாறுமாறாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.104 விற்கப்பட்டு வருகிறது. இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக இந்த தொழிலை, தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் எப்சி கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஆட்டோ தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உயர்த்திய கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரியிலும் ஆந்திரா அரசு போல் ஆண்டுதோறும் ஆட்டோக்களுக்கு எப்சி எடுப்பதற்கு ரூ.10,000 மானியம் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.