இவ்வளவா உயர்த்துவது? எதிர்த்துப் போராடிய ஆட்டோக்காரர்கள்

இவ்வளவா உயர்த்துவது? எதிர்த்துப் போராடிய ஆட்டோக்காரர்கள்
சாலையில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள்

புதுச்சேரி மாநிலத்தில் ஆட்டோக்களுக்கு புதுப்பிப்புக் கட்டணம் 7 மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. புதுச்சேரி போக்குவரத்துத் துறை சார்பில் இதுவரை ஆண்டுக்கான ஆட்டோக்களுக்கான புதுப்பிக்கும் கட்டணம் (எப்சி) ரூ. 700 வசூலிக்கப்பட்டு வந்தது. அந்த தொகை திடீரென தற்போது ரூ.4,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி ஆட்டோக்களுக்கான புதுப்பிக்கும் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் புதுச்சேரி ஆட்டோக்காரர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலியார்பேட்டை பகுதியில் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்கு தங்கள் ஆட்டோக்களை கொண்டுவந்தவர்கள் அலுவலகத்தின் முன்பாக சாலையின் இரு புறங்களிலும் ஆட்டோக்களை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் - சென்னையிடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த கட்டணத்துடன் மேலும் இன்சூரன்ஸ் தொகை 8000 ரூபாய், சாலைவரி 1500 ரூபாய் என்று கட்ட வேண்டி இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டிருப்பதாகவும் ஆட்டோக்காரர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் எப்சி எடுப்பதற்கு முன்பாக ஆட்டோவை பழுது நீக்குதல் மற்றும் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட வேலைகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது எனவும் கூறும் ஆட்டோ உரிமையாளர்கள் உயர்த்தப்பட்ட எப் சி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

படங்கள்: எம்.சாம்ராஜ்

Related Stories

No stories found.