அடுத்த மாதம் திருமணம்... தலையில் பாய்ந்த குண்டு: இரவில் உயிரை மாய்த்துக் கொண்ட போலீஸ்காரர்

அடுத்த மாதம் திருமணம்... தலையில் பாய்ந்த குண்டு: இரவில் உயிரை மாய்த்துக் கொண்ட போலீஸ்காரர்
ஆயுதப்படை காவலர் பெரியசாமி

ஆயுதப்படை காவலர் ஒருவர் நேற்று இரவு பணியின் போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 30 பள்ளிகளில் நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வுக்கான விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிதம்பரம் அருகே சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (26) என்பவரும் ஒருவர்.

இவர் கடந்த 6-ம் தேதி முதல் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு பணியில் இருந்த இவர் இன்று அதிகாலை சக காவலர்கள் சென்று பார்த்தபோது துப்பாக்கியால் தன் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீஸார்
பள்ளி வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீஸார்

அதனையடுத்து உடனடியாக அங்கு விரைந்த காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ், உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெரியசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெரியசாமிக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தற்போது திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in