`அப்பா அம்மாவ பாத்துக்கோ... யாரையும் நம்பாதிங்க'- தம்பிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த மாணவி

`அப்பா அம்மாவ பாத்துக்கோ... யாரையும் நம்பாதிங்க'- தம்பிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த மாணவி

கடலூர் தனியார் மகளிர் கல்லூரியில் படித்த மாணவி, தன்னுடைய சூழ்நிலை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரியின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் மகளிர் கலைக் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு காலை மற்றும் மாலை நேர வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை வழக்கம்போல் காலை நேர வகுப்புக்கு மாணவிகள் வந்தனர். அப்போது அங்குள்ள கழிவறையில் மாணவி ஒருவர் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தந்தனர். நிர்வாகத்தினர் உடனடியாக இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து கல்லூரிக்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த மாணவியின் பெயர் தனலட்சுமி (வயது 19), என்பதும், இவர் கல்லூரி விடுதியில் தங்கி பி.காம் முதலாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் விழுப்புரம் அருகேயுள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகள் என்பதையும் போலீஸார் கண்டறிந்தனர்.

மாணவியின் உடலில் இருந்து அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் போலீஸார் கண்டறிந்தனர். அந்த கடிதத்தில் தனது குடும்ப சூழல் குறித்து மிகவும் உருக்கமாகவும், குடும்பத்தினர் மேல் மிகுந்த அக்கறையுடனும் அந்த மாணவி எழுதியுள்ளார். மாணவியின் அந்த கடிதத்தில் உள்ளதாவது:

தம்பி சத்தி நல்லா படிடா, அப்பா அம்மாவ பாத்துக்கோ யாரையும் நம்பாதிங்க, இது போலியான உலகம், நான் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேனோ என பயமா இருக்கு, அதனாலதான் இந்த முடிவை எடுத்து விட்டேன். நான் இறந்துவிட்டால் என்.சி.சி. யூனிபாமை எனக்கு போடுங்க, எனது அக்கவுண்டில் ரூ.6 ஆயிரம் இருக்கு, அதில் நீ வாட்ச் வாங்கிக்க, என் வாட்ச்சை நிஷாந்திக்கு கொடு. அவளை நல்லா படிக்க வை. நீ பெரியாளா ஆனப்புறமும் அப்பா, அம்மாவ எதிர்த்து பேசக்கூடாது.

அப்பாவுக்கு ரொம்ப செலவு கொடுக்காத, அம்மாவை ஆடு மாட வித்திட சொல்லு, அம்மா ரொம்ப கஷ்டப்படுது, ஐயாவுக்கும் கோவிந்த் அப்பாவுக்கும் அம்மாவை சாப்பாடு போட சொல்லு, சண்டை போட வேண்டாம், இந்த கடிதத்தை படித்துவிட்டு கிழித்து போட்டுவிடுங்க" என்று உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in