ரூ.5 லட்சம் தந்தால் வழக்கை முடிக்கிறேன்: லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய குமரி டி.எஸ்.பி

ரூ.5 லட்சம் தந்தால் வழக்கை முடிக்கிறேன்: லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய குமரி டி.எஸ்.பி
டி.எஸ்.பி தங்கவேலு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கண்மணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த சோதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் டி.எஸ்.பி தங்கவேலுவிடம் இருந்து சற்றுமுன் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதோடு அவரிடம் தொடர்ந்து விசாரணையும் நடந்துவருகிறது.

கைப்பற்றப்பட்ட பணம்
கைப்பற்றப்பட்ட பணம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்டக் குற்றப்பிரிவு இயங்கி வருகிறது. இங்கு டி.எஸ்.பியாக இருப்பவர் தங்கவேலு. இவர் இதற்கு முன்பு மதுரை குற்ற ஆவணப்பிரிவு டி.எஸ்.பியாகவும், கோபி டி.எஸ்.பியாகவும் இருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இவர் குமரிமாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பியாக செயல்பட்டுவருகிறார். இவர் நிலம் தொடர்பான வழக்கு ஒன்றை முடித்து வைப்பதற்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. சம்பந்தப்பட்ட நபர் தொகையைக் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பீட்டர் பால் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இதில் தங்கவேலுவிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டதோடு, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அவர் இன்று இரவுக்குள் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.