தமிழகத்தில் முதல் முறையாக வனவிலங்குகளுக்கு மேம்பாலம்!

மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்

வகுத்தமலை வனப்பகுதியில் உள்ள அரிய வகை விலங்கினங்கள் ஒரு மலைப்பகுதியில் இருந்து மற்றொரு மலைப்பகுதிக்குச் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மதுரை வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை ரூ.555 கோடி மதிப்பில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் 80 சதவீதப்பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நெடுஞ்சாலை பாலமேடு அருகே உள்ள வகுத்தமலை வனப்பகுதியினுள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வனப்பகுதியில் உள்ள அரிய வகை விலங்கினங்களைக் காக்கும் வகையிலும், அவை ஒரு மலைப்பகுதியில் இருந்து மற்றொரு மலைப்பகுதிக்குச் செல்லவும் 210 மீட்டர் தூரத்திற்கு இரண்டு மலைகளை இணைக்கும் வகையில் வனவிலங்களுக்கான மேம்பாலம் (Animal Passover Bridge) அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, தமிழக வனத்துறையிடம் அனுமதி கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறை விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான அனுமதியை வனத்துறை தற்போது வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வனவிலங்களுக்கான மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 2023-ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்திலேயே முதல்முறையாக வனவிலங்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது குறித்து மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமி டபாலா கூறுகையில், "விலங்குகள் கடந்து செல்வதால் ஏற்படும் மனித-மிருக மோதல்களைத் தவிர்க்க இப்பாலம் ஒரு நிலையான வளர்ச்சி மாதிரியாக இருக்கும். மேலும், இப்பாலத்தின் கீழ் சிறிய விலங்குகள் செல்ல 2.5 மீட்டர் அளவில் பாதை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்தில் வாசனை, ஒலி மற்றும் ஒளி தடுப்புகள், வேலிகள் ஆகியவை அமைய உள்ளன. விலங்குகளுக்கு வசதியாக நீர் குளங்களையும் மற்றும் பிற வசதிகளையும் வனத்துறை மூலமாக செயல்படுத்தப்பட உள்ளோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in