
மதுரை மாநகராட்சியின் அனுமதியின்றி அம்மா உணவகத்தில் பூரி, வடை, ஆம்லெட் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஏழை, எளியோரின் பசியை போக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டம் அம்மா உணவகம். மதுரை மாநகராட்சியில் 12 அம்மா உணவகங்கள் உள்ளன. அதில் ஒன்றான மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள ரூ. 1-க்கு விற்பனை செய்யக்கூடிய இட்லி மற்றும் ரூ. 5-க்கு விற்பனை செய்யக்கூடிய பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லெட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகளை வழங்கி வருகின்றனர். இதேபோல், மதிய வேளைகளிலும் ரசம், மோர், ஆம்லெட் என அனுமதிக்கப்பட்ட சாதத்தோடு சேர்த்து விற்பனை செய்து வருகின்றனர்.
அம்மா உணவகத்திற்காக வழங்கப்படும் மாவு, சிலிண்டர் மற்றும் ஊழியர்களை தனக்கு பிடித்தவாறு உணவுகளை விற்பனை செய்ய வைத்து அதில் லாபம் ஈட்டுவதாகவும் நாள்தோறும் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை அம்மா உணவக ஊழியர்களிடம் பெற்றுக்கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த உணவுகளை தயாரிப்பதற்காக ரேசன்கடை அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு , உளுந்து, ரவை போன்றவை பயன்படுத்துவதாகவும், ரேசன் அரிசி பொருட்கள் அம்மா உணவகத்திற்கு எப்படி வருகின்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஏழை, எளியோரின் பசியைப் போக்க செயல்படுத்தப்பட்ட அம்மா உணவகத்தை திமுக கவுன்சிலர்கள் சிலர் தங்களுக்கு லாபம் ஈட்டும் உணவகமாக மாற்றியுள்ளது வேதனை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக கவுன்சிலர் தரப்பில் விளக்கம் கேட்டபோது, தாங்கள் பொதுமக்களின் வசதிக்காக குறைந்த விலையில் வழங்குவதாகவும் அரசியல்நோக்கோடு சிலர் புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.