மேலூரில் மெய்யாலுமே வலிமை காட்டிய அஜித் ரசிகர்கள்!

மேலூரில் மெய்யாலுமே வலிமை காட்டிய அஜித் ரசிகர்கள்!

அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். அந்த கொண்டாட்டங்களில் ஓர் அம்சமாய் உருப்படியான காரியம் ஒன்றையும் மதுரை மேலூர் அஜித் ரசிகர்கள் செய்திருக்கிறார்கள்.

அஜித் ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் ஆக்‌ஷன், சென்டிமென்ட் என ஜனரஞ்சகத்துடன் சகலரையும் ஈர்த்து வருகிறது வலிமை திரைப்படம். மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. பிப்.24 அன்று வெளியான வலிமை திரைப்படத்தின் முதல் நாள் வசூல், விஜய்யின் சர்க்கார் திரைப்படத்தின் சாதனை வசூலை நெருங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்துக்காக கட் அவுட், பாலாபிஷேகம் என பழகிய கொண்டாட்டங்களில் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டு வந்தார்கள். அப்படியான ஏற்பாடுகளில் மேலூரை சேர்ந்த அஜித் ரசிகர்களும் மும்முரமாக இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அஜித்தின் பெயரில் முன்னுதாரணமான காரியத்தில் ஈடுபட்டு கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

இது குறித்து மேலூரை சேர்ந்த ’அன்பின் அதிபதி அஜித் ரசிகர் மன்றத்தினர்’ சார்பில் பேசியவர்கள், ”ஏ.கே திரைப்படங்களை எப்போதும் தீபாவளி கணக்காக கொண்டாடி தீர்ப்போம். மேலூர் கணேஷ் தியேட்டரில் அஜித் திரைப்பட வெளியீடு திருவிழா போல கோலாகலமாக இருக்கும். அஜித் ரசிகர்கள் மத்தியில் கட் அவுட் வைப்பதில் போட்டியும் இருக்கும். அந்த வகையில் பெரியளவில் கட் அவுட் வைக்க பணம் சேர்த்து வைத்திருந்தோம். அப்போது உள்ளூர் ஆசிரியை ஒருவர், குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாது தவிக்கும் கல்லூரி மாணவி குறித்து எங்களிடம் தெரிவித்தார்.

அதைக் கேட்டதும் வெறுமனே பச்சாதாபம் கொள்ளாது பயனுள்ள வகையில் உதவ முடிவு செய்தோம். எங்களுக்குள் கலந்து பேசி ஒரு முடிவெடுத்தோம். அதன்படி, கட் அவுட்டுக்காக சேகரித்து வைத்திருந்த தொகையில் ரூ10 ஆயிரத்தை பி.எட் இரண்டாமாண்டு படிக்கும் ஏழை மாணவிக்கான கல்விக் கட்டணமாக கல்லூரியில் சேர்ப்பித்தோம். மிச்சமிருந்த தொகையை வைத்து சுமாரான கட் அவுட் வைத்து வலிமை ரிலீஸை கொண்டாடினோம்” என்றார்கள் மகிழ்ச்சியுடன்.

ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்று அஜித் அவற்றை கலைத்த பிறகும், அன்பின் மிகுதியால் அவரை கொண்டாடி வரும் ரசிகர்கள், அர்த்தமுள்ள நற்பணிகளிலும் ஈடுபடுவது ஆச்சரியத்துக்கு உரியது. மேலூரில் மெய்யாலுமே மாஸ் காட்டியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

Related Stories

No stories found.