
நாகர்கோவில் மாநகராட்சிக்கு கட்டப்பட்டுவரும் புதிய கட்டிடம் முடியும் தருவாயில் உள்ளது. இந்தக் கட்டிடத்திற்கு கலைஞர் அரங்கம் என பெயர்சூட்ட அதிமுகவின்ர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு, கலைஞர் அரங்கம் என பெயர் வைப்பதா என கொந்தளிக்கின்றனர் அதிமுகவினர்.
தன் நகைச்சுவைகள் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்.எஸ்.கே. நாஞ்சில் சுடலையாண்டி கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. 49 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் தன் படங்களின் மூலம் சமூக மறுமலர்ச்சிக்கான விசயங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தார். எம்.ஜி.ஆரால், என்.எஸ்.கிருஷ்ணனின் மறைவுக்குப் பின்பு, நாகர்கோவில் மணிமேடை பகுதியில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது. இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சியின் கீழ் இயங்கும் வகையில் கலைவாணர் அரங்கமும் கட்டப்பட்டது. இதன்மூலம் மாநகராட்சிக்கும் வருவாய் வந்துவந்தது.
இந்நிலையில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக உயர்ந்தது. இந்நிலையில் புதிய மாநகராட்சிக் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி வசம் இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 90 சதவீத பணிகள் இப்போது முடிந்திருக்கும் நிலையில் கலைவாணர் அரங்கத்தை இடித்துக் கட்டப்பட்ட மாநகராட்சி அரங்கத்திற்கு, கலைஞர் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தையும் இதனால் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்து வெளியேறினர்.
அனைத்துத் திட்டங்களுக்கும், கருணாநிதி பெயர் வைப்பதாக தமிழக அரசு மீது ஏற்கெனவே விமர்சனப் பார்வை உள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக் கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரைத் தூக்கிவிட்டு, கருணாநிதி பெயரை வைக்க முயற்சிப்பது கலைவாணர் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.