`அண்ணாமலைக்கு இது தெரியாமல் போனது எப்படி-' போராட்ட களத்தில் கொந்தளித்த அதிமுக எம்.எல்.ஏ

`அண்ணாமலைக்கு இது தெரியாமல் போனது எப்படி-' போராட்ட களத்தில் கொந்தளித்த அதிமுக எம்.எல்.ஏ
ஆர்ப்பாட்டத்தில் பேசும் அருண்மொழித்தேவன்

திருவாரூரில் வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என்.எல்.சியால் பாதிக்கப்படும் மக்களுக்காக போராட மாட்டாரா? என்று புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி.க்கு நிலம், வீடு கொடுத்த மக்கள், வசிக்கும் பகுதிகளுக்கு வழங்கிவந்த மின்சாரத்தை என்எல்சி நிறுவனம் திடீரென துண்டித்துவிட்டது. அதனை எதிர்த்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு மாற்று இடமாக மந்தாரக்குப்பம் பகுதியில் இடம் வழங்கப்பட்டது.

அங்குள்ள ஐஐடி நகர், திருவள்ளுவர் நகர், பெரியார் நகர், சிவாஜி நகர், பட்டு அய்யனார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் சிலரின் வீடுகளுக்கு திடீரென மின்சார இணைப்பை என்.எல்.சி. நிர்வாகம் துண்டித்துவிட்டது.

இதனை கண்டித்து இன்று நெய்வேலி என்.எல்.சி. இரண்டாம் சுரங்கம் நுழைவு வாயிலில் அனைத்துக் கட்சி போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, தி.மு.க., பா.ம.க., த.வா.க., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும், வர்த்தக சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருண்மொழிதேவன் பேசுகையில், "என்.எல்.சி. நிர்வாகம் நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கவில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஆனால் தினக்கூலி அடிப்படையில் 360 ரூபாய் வழங்கிய வேலையைக் கூட தற்போது நிறுத்தி வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

இன்றைக்கு உலக நாடுகளில் தமிழர்கள்தான் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் சி.இ.ஓ.க்களாக தலைமை பதவியில் இருக்கிறார்கள். ஆனால் இங்கே என்.எல்.சி.யில் வட இந்தியாவில் பி.இ. படித்து விட்டு இங்கே ஒன்றரை லட்சம் பேர் வேலையில் அமர்கிறார்கள். அடுத்து என்.எல்.சி.யில் தலைமை பதவியில் கூட அமர்ந்து விடுகிறார்கள். ஏன் நிலம், வீடு கொடுத்த எங்கள் வீட்டில் பி.இ. படித்த இளைஞர்கள் இங்கே என்ஜினியராக பணியாற்ற கூடாதா? தினக்கூலிதான் வழங்குவீர்களா?

சட்டமன்றத்தில் கூறியதுபோல உடனடியாக ஒரு குழுவை அமைத்து மக்களின் பிரச்சினைக்கு தமிழக அரசும் முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது. அப்படி ஒத்துழைப்பு வழங்காவிட்டால் இங்கே என்.எல்.சி. செயல்பட முடியாது.

ஆனால் அப்படி இந்த அரசு செய்யாமல் கத்தாழை, கரிவெட்டி போன்ற ஊர்களில் போலீஸார் மூலம் மக்களை மிரட்டி அவர்களின் நிலங்களில் பள்ளங்களை தோண்டுவது நல்லது ஆகாது. நிலைமை இப்படியே தொடர்ந்தால் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடியாரை அழைத்து வந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்" என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து அருண்மொழித்தேவன், தன் பேச்சை அப்படியே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பக்கம் திருப்பினார். "திருவாரூரில் தேரோடும் வீதிக்கு வைக்காத பெயருக்காக போராட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்த நெய்வேலி என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரது பிரச்சினைகள் தெரியாமல் போனது எப்படி.?

நாங்கள் சட்டமன்றத்தில் பேசியது அவருக்கு தெரியவில்லையா.? இனியாவது இதையெல்லாம் தெரிந்து கொண்டு இப்பகுதியில் உள்ள பிரச்சினைக்காக அண்ணாமலை வந்து போராட வேண்டும். இதுகுறித்து பிரதமரிடம் கூறி என்.எல்.சி.யின் மக்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்" என்றார்.

அதிமுக எம்எல்ஏவான அருண்மொழித்தேவன் தங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவின் மாநில தலைவரை மக்கள் பிரச்சினைகளுக்காக போராட வரவேண்டும் என்று விமர்சித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in