182 ஏக்கர் அரசு நிலம் மோசடியில் அதிமுக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு

182 ஏக்கர் அரசு நிலம் மோசடியில் அதிமுக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு

தேனி மாவட்டத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் தனியார் பெயருக்கு பட்டா வழங்கிய வழக்கில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்தது.

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் தாமரைக்குளம், கெங்குவார்பட்டி, வடவீரநாயக்கன்பட்டியில் 182.50 ஏக்கர் அரசு நிலம் தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக பெரியகுளம் ஒன்றிய முன்னாள் அதிமுக செயலர் அன்னபிரகாஷ் மற்றும் வருவாய் அதிகாரிகள் பலர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அன்னபிரகாஷ், பிச்சைமணி, அழகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அன்னபிரகாஷ் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "1997-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக விரிவாக்கப்பணிக்காக என் குடும்பத்துக்கு சொந்தமான நிலங்களை அரசு கையகப்படு்த்தியது. அதற்கு அரசு இழப்பீடு தரவில்லை. மாற்று இடம் வழங்கப்பட்டு அதற்கு பட்டாவும் தரப்பட்டது. ஆனால், பட்டா வழங்கியது வருவாய் ஆவணங்களில் பதிவாகவில்லை. அந்த நிலத்தை 20 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று அன்னபிரகாஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in